தமிழுலகு *காளமேகப்புலவரின் கவித்திறன்*

July 18, 2022

தமிழுலகு*
*காளமேகப்புலவரின் கவித்திறன்*


கழுத்தில் கத்தி இருக்கும்.
ஒருவர் ஒரு குறிப்பு சொல்வார்.
உடனே புலவர் பாடல் பாட வேண்டும்.
பாட்டில் சொற்பிழை, பொருட்பிழை இலக்கணப்பிழை இருந்தால் கழுத்து அறுபடும்.
.
இப்படியும் இருந்திருக்கிறது அந்நாளில் இதற்குப்பெயர் அரிகண்டம்.
(போருக்கு மன்னன் புறப்படும் முன்னரோ அல்லது பொது நலம் வேண்டியோ யாரேனும் தன்னலமற்ற ஒருவர் தன் தலையை அறுத்து பலி கொடுத்துக்கொள்வர். அரிகண்டம் என்பதன் அர்த்தம் இதுதான்)
.
பாட்டில் பிழை என்றால், கழுத்தை அறுத்துக்கொள்வதா? இதென்ன கொடூரம், என்று முதலில் தோன்றியது. ஆனால் எத்தனை நாள்தான் “வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன்” என்றிருப்பது? அவர்களுக்கும் ஒரு திகில் போட்டி வேண்டாமா? இதுவும் skydive, car racing போல என்பது என் கருத்து. இரண்டிலுமே கரணம் தப்பினால் மரணம். திறமைசாலிக்கு அது ஒரு மைல் கல்.
.
இதுவரைக்கும் எந்தப் புலவராவது தவறாகப்பாடி தண்டனை அடைந்திருக்கிறார்களா என்ற தகவல் இல்லை.
.
ஒருமுறை ஒரு அரசவையில் பொறாமை கொண்ட புலவர் ஒருவர் காளமேகப் புலவரை “அரிகண்டம் பாடி வெற்றி பெறுவீரோ” என்றதற்கு “அரிகண்டமோ? silly fellows. நான் எமகண்டமே பாடுவேன்” என்றாராம். எமகண்டம் என்பது சுருக்கமாக “அரிகண்டம் + கொதிக்கும் என்னை மேல் உட்கார்ந்து படுவது”.
.
மேலும் குறிப்பு கொடுத்த அரை வினாடியில் பாடல் பாடப்படவேண்டும்.
இப்படிப்பட்ட போட்டியில் வெல்ல எத்தனை தமிழறிவு வேண்டும், கவித்துவம் வேண்டும்? எவ்வளவு மன வலிமை வேண்டும்?
.
“காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
neutron electron உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை” என்ற “Bhohr” அடிக்கும் பாடலை எழுத “பேரரசுகள்” நைல் நதிகரையில் உட்கார்ந்ததுதான் எழுத முடியும் என்கிறதுகள்.
.
ஆனால் காளமேகப்புலவர் இந்த எமகண்ட போட்டியில் 64 பாடல்கள் பாடி போட்டியை வென்றதாக சில குறிப்புகள் இருக்கின்றன. அவை எந்தப் பாடல் என்ற குறிப்பில்லை. ஆனால், புலவர் குறிப்புக்காக பாடிய பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சுவையான பாடல் ஒன்று இதோ:
.
ஒரு புலவர் “எல்லாக் கடவுளுக்கும் ஆறு தலையென்று பாடும்” என்றார்.
காளமேகப் புலவர் பாடியது:
.
“சங்கரற் கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதோ – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்”
.
[சங்கரனுக்கு ஆறு அவன் தலையில்,முருகனுக்கு ஆறு தலை, பிள்ளையாருக்கு மாறிய தலை.
திருமாலுக்கும் ஆறுதல் அளிப்பவன் -சிவனே உன் பாதம் பாடிப் போற்றுபவர்க்கும் ஆறுதல் கிடைப்பதைப் பார்]
.
வாழ்க புலவர்!
.
-ச. சண்முகநாதன்

***அசோகவனத்தில் சீதை.***

June 30, 2022

(அசோகவனத்தில் சீதையின் நிலையை கம்பன் எப்படி பாடினான் என்று தேடிய போது கிடைத்த முத்துக்கள்).

ராமன் கானகம் செல்ல வேண்டிய போது “நின் பிரிவினுஞ் சுடுமோ பெருங்காடு”, என்னையும் உன்னுடன் அழைத்துப்போ என்று அன்புக்கட்டளை இட்டு தானாக விரும்பியே அவனுடன் கானகம் சென்றவள். விதி வசம், அசோகவனத்தில் சிறை இருக்க வேண்டியாயிற்று.

அரசியாய் இருக்கவேண்டியவள் இப்படி எல்லாம் இழந்து அரக்கியர் காவலில் அசோகவனத்தில். எவ்வளவு துயரம் அவள் நெஞ்சில் இருந்திருக்க வேண்டும்!

சீதைக்கும் ராமனுக்கும் அடுத்ததாய் அந்த சோகத்தை அறிந்தவன் கம்பன். அவள் கொண்ட சோகத்தை விதம் விதமாக சொல்கிறான், கவித்துவமாய். சிலவற்றைப் பார்ப்போம்.

“மென் மருங்குல் போல் வேறுள வங்கமும் மெலிந்தாள்”

அவள் இடை மெலிந்து இருந்தது தெரியும். ஆனால் அவள் இடை போலவே இப்போது கை கால்களும் மெலிந்து போனதாம். (சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட பின் “எனக்கு மூக்கு இல்லை உன் சீதைக்கு இடை இல்லை, என்ன பெரிய வித்தியாசம்” என்று கேலி செய்தாள்).

சீதையின் முகம் வெயிலில் வைத்த விளக்காய் ஒளி இழந்து போனது என்று பாடுகிறான்.

“வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியில்லா மெய்யாள்”.

மற்றோரு ஒரு பாடலில் தெய்வத்தன்மை உடைய அமிர்தத்தால் மன்மதன் செய்த அரிய ஓவியம் புகை பட்டு அழகு மங்கியது என்று கண்ணீர் வடிக்கிறான்.

“ஓவியம் புகை உண்டதே ஒக்கின்ற உருவாள்”

ராமனைப் பிரிந்தாயிற்று. இனி என்ன செய்யப் போகிறோமோ என்று தெரியவில்லை. அழுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

“அழுத லன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவதறியாள்”

(மற்று அயல் ஒன்றும் = வேறொன்றும்)

என்ன செய்ய முடியும்? ராமன் வரவேண்டும். வேறு வழியே இல்லை. ராமன் வருவான் என்ற நம்பிக்கை ஒன்றே மனத்தில் கொண்டு உயிர் தாங்கினாள். இந்த நிலையில் அவளுக்கு பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

“என்கொல் எண்ணுவேன் என்னுமங் கிராப்பகல் இல்லாள்”

பகல் வந்து என்ன இரவு வந்தென்ன என்ற விரக்தி மனநிலையை அடைந்தாள் என்று சீதையின் மனநிலையை கண் முன்னே கொணர்கிறான் கவிச்சக்கரவர்த்தி.

கம்பராமாயணத்தில் எத்தனையோ மனதைப் பிழியும் காட்சிகள் இருந்தாலும் அசோகவனத்தில் சீதை இருந்தது போல் சோகமான இடம் இல்லை என்பது என் கருத்து.

அசோகவனத்துச் சீதை, கொஞ்சம் மனதை பிழியும் சமாச்சாரம்.

-ச. சண்முகநாதன்.

அர்ஜுனன் vs பரதன்

July 13, 2021

காதில் கேட்பதையெல்லாம் நம்ப முடியாதவனாக, அதிர்ச்சியில், உறைந்து போய் நிற்கிறான் பரதன். சில கேள்விகள் அவன் மனதில் எழுகிறது. விரக்தியின் விளிம்பில் இருந்து அந்த கேள்விகளை கேட்கிறான் பரதன்.

“ராமன் கானகம் சென்றது தந்தை இறந்த பின்னரா இல்லை அதற்கு முன்பேவா?”
“போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்

“அரசர் கோமகன் இருக்கவே, வனத்து அவன் ஏகினான்” – இது கைகேயி.

பரதனின் விரக்தியுடன் இப்பொழுது குழப்பமும் சேர்ந்து கொள்கிறது. “தந்தை இருக்கும் பொழுது ராமன் கானகம் போக வேண்டிய அவசியம் என்ன?” என்று கைகேயியை காரணம் கேட்கிறான். பிரச்சினையின் ஊற்றிடமே “என்ன பிரச்சினை” என்று கேட்கிறான் பரதன்.

“பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான் புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்?’ என்றான்

கைகேயி, கல்மனத்தினவளாய் பரதனிடம் நடந்ததை சொல்லத் துணிகிறாள்.
“எனக்களித்த வரத்தைக்கொண்டு ராமனை வனம் போகச்செய்து உனை அரியணை ஏற்ற வழி செய்தேன்” என்ற தன்னுடைய evil plans பற்றி விவரமாக சொல்கிறாள்.

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்;

ராமனை வனம் போகச் செய்து, அவனை கல்லிலும் முள்ளிலும் நடக்கச் செய்து, தன் தலையில் கிரீடம் வைத்தால் அது முள் கிரீடம் அல்லவா பரதனுக்கு? பரதனின் விழிகள் சிவந்து கொண்டிருந்தன, கோபத்தால்.

கைகேயி, with a stone face, தொடர்கிறாள்
” அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து
‘ என்றான்
என்று நடந்ததை இடி போல பரதன் தலையில் இறக்குகிறாள்.

இப்பொழுது பரதனுக்கு எல்லாமே புரிந்தது. தன் தலைமேல் வைத்துக் கொண்டாடிய ராமனை தூர எறிந்துவிட்டு, தன் தலையில் அரச கிரீடம் வைத்து அழகு செய்யப் பார்த்திருக்கிறாள் கைகேயி. தன்னலமற்ற பரதன், தனக்கு முடிசூட்டும் சந்தர்ப்பம் இது என்று எள்ளளவும் நினைக்கவில்லை. ஆனால் தந்தையை இழக்கவும் ராமன் கானகம் போகவும் ஆகிவிட்டதே என்று வருந்தி கோபத்தில் துடிக்கிறான்.

“துடித்தன கபோலங்கள்;
சுற்றும் தீச் சுடர் பொடித்தன மயிர்த் தொளை;
புகையும் போர்த்தது; மடித்தது வாய்;
நெடு மழைக் கை, மண் பக அடித்தன, ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே”

இது மிகக்கொடிய செயல் என்று நினைத்த பரதனுக்கு தன் முன் நிற்பது தாய் என்று தெரியவில்லை. ஒரு கொடிய செயல் செய்தவள் என்று மட்டுமே தெரிகிறது. அர்ஜுனன் போல அவன் “தவறு செய்தவள் என் தாய்” என்று மனத்தளர்ச்சி அடையவில்லை. மாறாக “வரம் கேட்டு என் தந்தையை கொன்று ராமனை காட்டுக்கு அனுப்பிய உன் வாயை கிழிக்காமல் விட்டு விட்டால் இதற்கு நானும் உடந்தையானவனாவேன். ஆனால் ராமன் கோபித்துக்கொள்வான் என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்” என்று உறுதியோடு சொல்கிறான்.

“மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம் பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்”. இது நடந்தும் “கீண்டிலென் வாய்”. ஆனால் “ஆயவன் முனியும் என்று அஞ்சினேன்”.

பரதன் goes ballistic. ஆனால் படிக்கும் நாமோ “அர்ஜுனன்” மனநிலையில் இருக்கிறோம். “ஆயிரம் இருந்தாலும் அவள் தாய் அல்லவா” என்று. பரதன் holds back nothing.””நோய் கூட உடனே கொல்லாது, நீ நோயை விட கொடுமையானவள். பேய் குணம் கொண்டவள் நீ. இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய்?” என்று உறுமுகிறான்.

“நோயீர் அல்லீர்; நும் கணவன் தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?”
என்று கடுமையான வார்த்தைகளால் கைகேயியை சாடுகிறான் பரதன்.

என் தந்தை தசரதன் நல்லவன். ராமன் கானகம் போகிறான் என்றவுடன் உயிர் துறந்தான். “வில் ஆர் தோளான் மேவினன், வெங் கானகம் என்ன, நல்லான் அன்றே துஞ்சினன்”. ஆனால் நானோ இன்னமும் உனக்கு தீங்கு செய்யாமலும் நானும் இறந்து போகாமலும் அழுது கொண்டிருக்கிறேன். என் அன்பு வேறும் நடிப்புதான் போல இருக்கிறது. “அன்பு உடையார்போல் அழுகின்றேன்” என்று நொந்து கொள்கிறான்.

“அன்புடையார்போல் அழுகின்றேன்” – பரதனின் உணர்ச்சியை தமிழால் எவ்வளவு அழகாக சொல்ல முடிகிறது கம்பனால்.

ராமன் கதை தொடரும்.
2021-41

பரதனின் Rendezvous With Reality

July 9, 2021

அயோத்தியா காண்டம்
பள்ளி படைப் படலம்
பாடல்கள் 45-60

நம் மன்னன் “தேவர் கைதொழ, வானகம் எய்தினான்; வருந்தல் நீ’ என்றாள்.
செய்தி கேட்டு துடித்துப் போகிறான் பரதன். ஓங்கி வளர்ந்த மராமரம் இடி (=அசனி) விழுந்து சாய்ந்தது போல, மயக்கமுற்று, கீழே விழுகிறான்.

“அறிந்திலன்; உயிர்த்திலன்;-அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து, தன் தந்தையை, தசரதனை, “நீ இறந்து போனதால் அறத்தை அழித்து அருளைக் கொன்றுவிட்டாய்” விரக்தியில் பழிக்கிறான்.

“அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறந்தனை…”

உயிருக்கு போராடுபவர்களின் உயிர், தனக்கு பிரியமானவர்கள் தன்னுடன் இருந்தால், பிரியாது. அவர்கள் கொஞ்ச நேரம் அருகில் இல்லாதபோதுதான் உயிர் பிரியும் என்பது ஒரு நாட்டுப்புற theory. அது தெரியாமலோ அல்லது விரக்தியாலோ “ராமனைப் பிரிந்து போக எங்கனம் மனது வந்தது உனக்கு” என்று துடிக்கிறான் பரதன்.

“….கண் உடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்

மேலும், நடந்தது என்னவென்று அறியாமல் “ராமன் முடிசூட்டிக் கொள்ளுகின்ற அழகைக் கண்ணால் காணும் பாக்கியம் இல்லை போலும் உனக்கு” என்று, கைகேயியின் முன்னாலேயே, அழுது அரற்றுகிறான்.

“கொற்றவன் முடி மணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்?”

“நெஞ்சு பொறுக்கவில்லை. நான் ராமனின் பாதம் தொழவேண்டும். அப்பொழுதான் எனக்கு ஆறுதல் கிடைக்கும்” என்று கண்களை துடைத்துக்கொண்டு வாய் விட்டுச் சொல்கிறான்.

“வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்,
சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது’ என்றான்”

நான் ராமன் மாளிகைக்கு போக வேண்டும் என்று சொன்ன பரதனிடம் கைகேயி “வில் வீரனே! தேவியோடும், தம்பியோடும் கானகம் சென்று விட்டான்” என்ற அடுத்த இடியை பரதன் தலையில் இறக்குகிறாள்.

தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று
இவ் இருவோரொடும் கானத்தான்’ என்றாள்.

“A What!” என்று, காதில் கேட்பதையெல்லாம் நம்ப முடியாதவனாக, அதிர்ச்சியில், உறைந்து போய் நிற்கிறான் பரதன்.

ராமன் கதை தொடரும்.
2021-40

சென்று கேட்பது என்ன செய்தியோ!

July 5, 2021

அயோத்தியா காண்டம்
பள்ளி படைப் படலம்
பாடல்கள் 9-44

Start Immediately என்ற செய்தி கண்டதும் பரதனும் சத்ருக்கணும் தங்களது படைகளுடன் கிளம்ப Start Immediately என்ற செய்தி கண்டதும் பரதனும் சத்ருக்கணும் தங்களது படைகளுடன் கிளம்ப தயாராகின்றனர். உடனிருந்தவர்கள் “அப்படி என்ன அவசரச் செய்தி? தரை வழி போனால் நாட்கள் பிடிக்கும் வான் வழி சென்றால் சீக்கிரம் போய் விடலாம்” என்று எண்ணுகின்றனர். அந்த நாட்களில் skyway is the highway.

அது முடியாததால் தரை மார்க்கமாக புறப்படுகிறான் பரதன். 8 நாட்கள் பயணம். வந்து சேர்கிறான்.
“நிறைந்த மாந்தர் நெருங்கினர்; நெஞ்சினில்,
‘பறந்து போதும்கொல்’ என்று, பதைக்கின்றார்”

கோசல நாட்டை அடைந்த பரதனுக்கு ஒன்றும் சரியாகப் படவில்லை. தசரதன் இறந்த செய்தி தெரியாததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மனம் வாடுகிறான்.

வயல்களில் ஏர் காணப்படவில்லை. இளைஞர்கள் யாவரும் தோள்களில் மாலை அணியவில்லை. வயல்களில் நீர் இல்லாமல், நெற் பயிர்கள், வாடி இருக்கிறது. திருமகள் கோசல நாட்டை நீங்கியது போல காட்சி அளிக்கிறது.

“ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே”

மாந்தர்களின் ஒளி நிறைந்த முகம் நகை இழந்தன; மாளிகைகள் நறுமணம் வீசும் புகை இழந்தன, மயில் போன்ற மாந்தர்களின் கூந்தல் மலர்களின்றி இருந்தது.

“உடனே புறப்பட்டு வா” என்ற தந்தி. கிளம்பி வந்தால் இங்கே பொலிவிழந்த நாடு. ஏதோ நடந்திருக்கிறது என்று மனதில் எண்ணிக்கொண்டே வருகிறான் பரதன்.
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்” என்பது கம்பன் மொழி.

வெறிச்சோடி கிடக்கும் நகரத்தைப் பார்த்து, தன் தம்பியிடம், “இது நம் தந்தை ஆளும் நாடுதானா? ஏன் இப்படி இருக்கிறது” என்று கவலையுடன் கேட்கிறான்.

“மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே!’ என்றான்”

அரண்மனையை அடைந்த பரதன் தன தந்தையைக் காணாமல் தவித்த பொழுது, கைகேயி அழைக்கிறாள். பரதன் “மன்னர் எப்படி இருக்கிறார்” என்று வினவ, கைகேயி அந்த தீச்செய்தியை பரதன் செவிகளில் சேர்க்கிறாள்.

நம் மன்னன் “தேவர் கைதொழ, வானகம் எய்தினான்; வருந்தல் நீ’ என்றாள்.

ராமன் கதை தொடரும்.
2021-39.

Start immediately

July 1, 2021

அயோத்தியா காண்டம்
பள்ளி படைப் படலம்
பாடல்கள் 1-8

ராமன் தவ வாழ்க்கையை ஆரம்பிக்க சித்திரகூட மலையில் ஆரம்பிக்கிறான்.

காட்சி மாற்றம்.

கேகய நாட்டில் இருந்த பரதனுக்கு, வசிஷ்டன் மூலமாக, அயோத்தியில் இருந்து ஓலை அனுப்பப் படுகிறது. “Start immediately” என்று. தூதுவரும் பரதன் இருப்பிடம் சென்று வாயில் காப்பவரிடம் ‘படிகாரிர்! எம் வரவு சொல்லுதிர் மன்னவற்கே!” என்றனர்.

வாயில் காப்பவருக்கு “படிகாரிர்” என்ற அருமையான தமிழ்ச்சொல் கம்பனிடம் கிடைக்கிறது. அடுத்தமுறை எங்காவது வாசலில் நிற்கும் சிப்பந்தியைப் பார்த்தால் “படிகாரிர்” என்ற சொல் நினைவுக்கு வரட்டும்.

பரதனும், தந்தியைப் பார்த்து பதறும் பாசமுள்ளவனாக, அப்பாவுக்கு ஒன்றும் இல்லையே (“தீது இலன்கொல் திரு முடியோன்” ) என்று விசாரிக்கிறான்.

வந்திருந்த தூதுவருக்கு அயோத்தியில் நடந்தது எல்லாம் தெரியும். இருந்தாலும் அந்தத் துயரச்செய்தியை இங்கேயே சொல்ல வேண்டாம் என்று உண்மையை மறைத்து ஒற்றை வரியில் “வலியன்” என்கின்றனர். வேறு எதுவும் சொல்லவில்லை. Just ஒரு “வலியன்” – அவ்வளவுதான்.

“சரி, இளையவனோடு இருக்கும் ராமன் நீங்காத செல்வதோடு தானே இருக்கிறான்?” என்று கேட்க தூதுவர் “உண்டு” என்று ஒற்றை வரியில் மட்டும் பதில் சொல்கின்றனர்.

“‘வலியன்’ என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
‘இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ?’ என, ‘உண்டு’ என,
தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே”

இரண்டு கேள்விகளிலும் பரதனுக்கு ஏற்பட்ட உள்ளுணர்வை, தசரதனுக்கு ராமனுக்கும் ஏற்பட்ட தீங்கை, அழகாக சொல்லி விட்டான் கம்பன்.

தூதுவர்களும், தசரதன் “வலியன்”, ராமனிடம் செல்வம் நீங்காமல் “உண்டு” என்று இரண்டே வார்த்தைகளில் உணர்ச்சிகளை விழுங்கி விட்டு “ஓலையை (திருமுகம்) வாங்கிக் கொள்ளவேண்டும்” என்றனர்.

“இற்றது ஆகும், எழுத அரு மேனியாய்!
கொற்றவன் தன் திருமுகம் கொள்க”

ஓலையில் இருந்தது “நீ நிறைவேற்ற வேண்டிய அவசரமான காரியம் ஒன்று இருக்கிறது. Start immediately” என்ற செய்தி.

செய்தி கண்ட பரதன் மகிழ்ச்சியில் திளைக்கிறான். உடனே தேர் ஏறி தம்பி சத்ருக்கனுடன் அயோத்தி விரைகிறான்.

தந்தை வானகம் சென்றதும் ராமன் கானகம் சென்ற தீச்செய்தியை தன் செவி வாங்க அயோத்தி விரைகின்றனர் பரதனும் சத்ருக்கனும்.

ராமன் கதை தொடரும்.
2021-38.

மந்தியும் கடுவனும்

June 28, 2021

அயோத்தியா காண்டம்
சித்திரகூடப்படலம்
பாடல்கள் 40-58

ராமன் சீதையுடன் பேசிக்கொண்டே நடக்கும் போது மாலை நேரம் ஆகியிருந்தது.

வனத்தில் விலங்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத்துவங்கின. கம்பன் 5 பாடல்களுக்கு ஒருமுறை, கற்பனைத்திறத்தாலோ அல்லது தமிழ் அறிவாலோ, திடீரென்று வியப்பில் ஆழ்த்துவான். அப்படி ஒரு பாடல் இதோ:

“மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.”

மந்தி (பெண் குரங்கும்) கடுவனும் (ஆண் குரங்கும்) தங்கள் இருப்பிடமான மரங்களை நோக்கின. கடுவன் என்பது ஆண் குரங்கு. (“கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி” என்று கந்தர் ஷஷ்டி கவசத்தில் வரும் கடுவன் ஒரு வகை தோல் நோய். இது ஒரு Context sensitive வார்த்தை). அதனால் இனிமேல் யாரையாவது திட்டும்போது சரியான genderல் திட்டவும். திருப்பாணாழ்வார்”மந்தி பாய் வட வேங்கட மாமலை’ என்று மந்தியை பொதுச்சொல்லாகவே பயன்படுத்துகிறார்.

தந்தியும் ( ஆண் யானையும் ) பிடிகளும் (பெண் யானைகளும்) தங்கள் இருப்பிடம் செல்லும் வழியை நோக்கி சென்றன. யானைகளுக்குத்தான் தமிழில் எத்தனை பெயர்! வேழம் , களிறு, பிடி, தந்தி, பகடு, கைமா, கைமான்…

குற்றமற்ற பறவைகள் தங்கள் கூடு நோக்கி செல்கின்றன. இப்படி இருக்கையில் ராமன், சீதையுடன், அந்திப்பொழுது வந்தாகிவிட்டது, வழிபட வேண்டும் என்று எண்ணி கண்களை மூடி கைகள் குவித்து வழிபடுகிறான்.

பின்னர் இலக்குவன் குடில் அமைக்க, இராமனும் சீதையும் குடிபுகுகின்றனர். அந்தக்குடில் ஒரு தேர்ந்த பொறியாளர் கட்டிய வீடு போல இருந்ததால் ராமன் வியந்து கண்களில் நீர் வழிய “இதெல்லாம் எங்கப்பா கத்துக்கிட்ட!” என்று பெருமையுடன் கேட்கிறான்.

“என்று கற்றனை நீ இது போல்?’ என்றான்-
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்”

எனக்கு எவ்வளவு புகழ் இருந்து என்ன பயன்? எனக்காக நீ கஷ்டப்படுகிறாய். “இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள்” என்று மனம் வருந்துகிறான் ராமன்.

உத்தமத் தம்பி லக்ஷ்மணனோ ” இது என் கடன்” என்று பணிந்து நிற்கிறான்.

சரி, தவ வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான், என்று நினைத்த ராமனும் “மண்ணில் சேர்க்கும் செல்வத்துக்கு எல்லை உண்டு.. ஆனால் தவம் என்கிற செல்வத்துக்கு எல்லையே இல்லை. அதை நினைத்து இங்கே இந்த சித்திரகூட மலையில் இருப்போம்” என்று அங்கே தங்க ஆரம்பிக்கிறார்கள்.

சித்திரகூடப்படலம் முற்றியது.

ராமன் கதை தொடரும்.
2021-36.

June 28, 2021

அயோத்தியா காண்டம்
சித்திரகூடப்படலம்
பாடல்கள் 1-39

மீண்டும் ஒரு பயணம். பரத்வாஜ முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு குளிர்ந்த நிலத்தில் நடந்து மூவரும் சித்திரகூட மலையை நோக்கி நடக்கின்றனர்.

சித்திரகூடப் படலத்தில், ஒவ்வொரு பாடலிலும், முதல் வரியில் சீதையை அன்பாக அழைத்து, பின் வரும் மூன்று அடிகளில் வனத்தின் அழகைப்பார் எனும் விதத்தில் அமைந்த அற்புதக் கவிதைத் தொகுப்பு. இப்படி ஒவ்வொரு பாடலிலும், ராமன், சீதையை அன்பாக அழைக்கும் வரிகளை தொகுத்தால் ஒரு அழகான காதல் கவிதைத் தொகுப்பு கிடைக்கும். முன்னரே படித்திருந்தால் கொஞ்சம் உபயோகமாக இருந்திருக்கும். 🙂

உதாரணமாக, “ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!” என்று விளித்து, அங்கே நடக்கும் ஒரு ஊடலை விளக்கிச் சொல்கிறான்.

“ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!
கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர மிதுனங்கள்-பாராய்! “

“கோபத்தால், கொண்டவரிடன், ஊடல் செய்யும் குறிஞ்சி மகளிர். அவர்களைப் பார்த்து கின்னர மிதுனங்கள், ஊடல் நீங்கும் படி பாடுகின்ற அழகான காட்சியைப் பார்”

சித்திரகூட படலத்தை எழுதும் போது கம்பன், சில இடங்களில், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. வர்ணனை கொஞ்சம் உக்கிரமாக இருக்கிறது. இதுவரை சீதைக்கு வனத்தின் அழகை காட்டும் பொழுது “மயில் இயல் மடமானே”, “அமுதினும் இனியாளே”, “அகில் புனை குழல் மாதே”, “வாள்புரை விழியாய்” என்று ராமன் பாடியதாக சொன்னவன் இந்த பயணத்தில் சீதையை அவ்வளவு மென்மையாக இல்லாமல் கொஞ்சம் உக்கிரமாக இருக்கிறது கற்பனை.

ஒரு பாடலில் “குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே” என்று பாடும்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது. “இரத்தம் தோய்ந்த வாள்போல செம்மையான வரிகளை கொண்ட கண்களை உடையவளே” எனும்போது, “ஆயிரம் தான் இருந்தாலும் ராமன் வீரன்தானே. அந்த குணம் காதலின் போது வெளிப்படாமலா இருக்கும்” என்ற எண்ணம் தோன்றுகிறது.

இப்படியே பேசிக்கொண்டு போகும்போது மாலை நேரம் ஆகியிருந்தது. லக்ஷ்மணன் ஒரு குடில் அமைக்கிறான், அவர்கள் தங்குவதற்காக.

அடுத்த பதிவுகளில் மேலும் பார்ப்போம்.

காதல் புரிய வேண்டுவோருக்கான கம்பனின் Ready made வரிகள், பாடல்களின் முதல் வரியில் இருந்து:

“வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே!”
.
“உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே”
.
“ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!”
.
“‘வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே!”
.
“ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!”
.
“வீறு பஞ்சின்றி அமிழ்த நெய் மாட்டிய விளக்கே!”
(my favorite line)

ராமன் கதை தொடரும்.2021-35

#kambaramayanam

வீரனின் காதல் கவிதை

June 26, 2021

அயோத்தியா காண்டம்
சித்திரகூடப்படலம்
பாடல்கள் 1-39

மீண்டும் ஒரு பயணம். பரத்வாஜ முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு குளிர்ந்த நிலத்தில் நடந்து மூவரும் சித்திரகூட மலையை நோக்கி நடக்கின்றனர்.

சித்திரகூடப் படலத்தில், ஒவ்வொரு பாடலிலும், முதல் வரியில் சீதையை அன்பாக அழைத்து, பின் வரும் மூன்று அடிகளில் வனத்தின் அழகைப்பார் எனும் விதத்தில் அமைந்த அற்புதக் கவிதைத் தொகுப்பு. இப்படி ஒவ்வொரு பாடலிலும், ராமன், சீதையை அன்பாக அழைக்கும் வரிகளை தொகுத்தால் ஒரு அழகான காதல் கவிதைத் தொகுப்பு கிடைக்கும். முன்னரே படித்திருந்தால் கொஞ்சம் உபயோகமாக இருந்திருக்கும். 🙂

உதாரணமாக, “ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!” என்று விளித்து, அங்கே நடக்கும் ஒரு ஊடலை விளக்கிச் சொல்கிறான்.

“ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!
கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர மிதுனங்கள்-பாராய்! “

“கோபத்தால், கொண்டவனுடன், ஊடல் செய்யும் குறிஞ்சி மகளிர். அவர்களைப் பார்த்து கின்னர மிதுனங்கள், ஊடல் நீங்கும் படி பாடுகின்ற அழகான காட்சியைப் பார்”

சித்திரகூட படலத்தை எழுதும் போது கம்பன், சில இடங்களில், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. வர்ணனை கொஞ்சம் உக்கிரமாக இருக்கிறது. இதுவரை சீதைக்கு வனத்தின் அழகை காட்டும் பொழுது “மயில் இயல் மடமானே”, “அமுதினும் இனியாளே”, “அகில் புனை குழல் மாதே”, “வாள்புரை விழியாய்” என்று ராமன் பாடியதாக சொன்னவன் இந்த பயணத்தில் சீதையை அவ்வளவு மென்மையாக இல்லாமல் கொஞ்சம் உக்கிரமாக இருக்கிறது கற்பனை.

ஒரு பாடலில் “குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே” என்று பாடும்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது. “இரத்தம் தோய்ந்த வாள்போல செம்மையான வரிகளை கொண்ட கண்களை உடையவளே” எனும்போது, “ஆயிரம் தான் இருந்தாலும் ராமன் வீரன்தானே. அந்த குணம் காதலின் போது வெளிப்படாமலா இருக்கும்” என்ற எண்ணம் தோன்றுகிறது.

இப்படியே பேசிக்கொண்டு போகும்போது மாலை நேரம் ஆகியிருந்தது. லக்ஷ்மணன் ஒரு குடில் அமைக்கிறான், அவர்கள் தங்குவதற்காக.

அடுத்த பதிவுகளில் மேலும் பார்ப்போம்.

காதல் புரிய வேண்டுவோருக்காக கம்பனின் முதல் வரித் தொகுப்பு இங்கே ready made ஆக:
.
“வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே!”
.
“உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே”
.
“ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!”
.
“‘வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே!”
.
“ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!”
.
“வீறு பஞ்சின்றி அமிழ்த நெய் மாட்டிய விளக்கே!”
(my favorite line)

ராமன் கதை தொடரும்.
2021-35

பெய்யெனப் பெய்யும் மழை

June 20, 2021

அயோத்தியா காண்டம்
வனம்புகு படலம்
பாடல்கள் 29-47


பரத்வாஜ முனிவரும் ஒரு கோரிக்கை வைக்கிறார் ராமனிடம்.குகன் வைத்த அதே கோரிக்கை. “எங்களோடு இங்கேயே தங்கி விடு” என்று முனிவனும் கோரிக்கை வைக்கிறான். ராமன் எல்லோராலும் ஆராதிக்கப்படுபவன் என்பதற்கு இதுவே சான்று. வேடுவன் முதல் கற்றறிந்த முனிவர் வரை ராமன் தன்னுடன் தங்கமாட்டானா என்கிற ஆசை கொண்டனர்.

ராமன், தன்மையுடன், “கோசல நாடு அருகில் தான் இருக்கிறது, நான் இங்கே இருப்பது தெரிந்தால் மக்கள் இங்கே நெருங்கி வருவர். அதனால் உங்கள் தவமும் என் தவ ஒழுக்கமும் கெடும்” என்று சொல்லி தவிர்க்க, பரத்வாஜ முனிவரும் “அதுவும் சரிதான். நீ சித்திரகூடம் சென்று தங்கிவிடு” என்று அறிவுறுத்துகிறான்.

மூவரும் சித்திரகூடம் நோக்கி நடக்கின்றனர். யமுனை ஆற்றைக்கண்டு அகம் மகிழ்ந்தனர். சித்திரகூடம் செல்லும் வழியில் ஒரு பாலை நிலத்தை கடக்க வேண்டியாயிற்று. சுடும் பாலை நிலத்தைப் பார்த்த ராமன் “ஜானகி இந்த சுடுமணலில் நடப்பது கடினம் ஆயிற்றே” என்று நினைத்து வருத்தமுற்றான்.

“நீங்கல் ஆற்றலள் சனகி’ என்று, அண்ணலும் நினைந்தான்”

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.” என்று வள்ளுவன் சொன்னது போல ராமன் நினைத்த மாத்திரத்தில் சூரியன் குளிர்ந்த கதிர்களை வீசினான். மேகங்கள்

“ஓங்கு வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்”
மேகங்களும் குளிர்ந்த நீர்துளிகளைப் பொலிந்து நிலத்தை குளிர்வித்தது.
“குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த”

சுற்றியிருந்த வனத்தில் ராமன் புகுந்ததால் வனம் முழுவதும் பூத்துகுலுங்கியதால் பருவ மாற்றமே வந்ததாம். கனியும் காலம் இல்லையென்றாலும் மரங்களில் பழங்கள் பழுத்தன. வேர் பற்றாத நிலையிலும் கிழங்குகள் விளைந்தன. காய்ந்து போயிருந்த மரத்தின் கொம்புகள், அரும்பி மலர்ந்து, ஒப்பனை செய்துகொண்ட பெண்களைப்போல அழகாக காட்சி அளித்ததாம்.

காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்”.

தர்மத்தின் தலைவன் ஒருவன் தோன்றினால் “காலம் இன்றியும் கனியும் கனி”.

குளிர்ந்த அந்நிலத்தில் நடந்த மூவரும் சித்திரகூட மலையை நெருங்கினர்.

வனம்புகு படலம் நிறைவடைந்தது.

ராமன் கதை தொடரும்.
2021-34

kambaramayanam